பெங்களூரு, மே 2: ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந. இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணி விழா அரங்கத்தில் திமுக மாநில அவைத் தலைவர் மொ. பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற்றது. இதில் ந.இராமசாமி குழுவின் நோக்கம், நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றிய பின்னர், கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அமைச்சர் த.மோ. அன்பரசனின் தாயார் த.மோ.ராஜாமணி அம்மையார், செலுவாதிநகர திமுக அவைத் தலைவர் ஜானகிராமன், ராமசந்திரபுரம் திமுக உறுப்பினர் க. முத்து, கர்நாடக மாநில ஐஎன்டியுசி தலைவர் எஸ்.எஸ். பிரகாசம், மகாலட்சுமிபுரம் வட்ட திமுக மாநில பிரதிநிதி டி.சம்பத், தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அப்பர் விழா ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேருக்கும் குழுவில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தொழிலாளர்களின் உரிமைக்காக சிகாகோ நகரில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வீறு கொண்டு எழுந்த வர்க்கப் போராட்டத்திற்கு வித்திட்டு போராடி உயிர்தியாகம் செய்து மே தினப் போராட்ட தொழிலாளர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முத்தமிழ் அறிஞர், உலக தமிழினத்திற்காக பாடுபட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு வழிநடத்தி, மனிதநேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு சமூக பொருளாதார முன்னேற்றம் கிடைக்கச் செய்த தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாட முடிவெடுத்தும், ஓமந்துரார் தோட்டத்தில் அரசு சார்பில் கலைஞர் உருவச்சிலை நிறுவப்படும் என்றும் அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தக் குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை மாநில திமுக சார்பிலும், துணை அமைப்புகள் சார்பிலும் சிறப்பாக கொண்டாடுவது என குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசு மீண்டும் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது கட்டாய ஆட்சி மொழியாக ஹிந்தியை திணிக்க முற்படுவதை இந்தக் குழு வனமையாக கண்டிக்கிறது. அந்தி வந்தால் நிலவு வரும், ஹிந்தி வந்தால் பிளவு வரும். இந்தப் பொன்மொழியை ஏற்று, கட்டாய ஹிந்தித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது. குழுவில் பொதுக்குழு உறுப்பினரும், மைசூருத் தமிழ்ச்சங்கத் தலைவருமான மைசூரு பிரான்சிஸ் மற்றும் மைசூருத் தமிழ்ச்சங்கச் செயலாளர் ரகுபதி ஆகியோர் அளித்த மைசூருத் தமிழ்ச்சங்கக் கோரிக்கைகளை ஏற்று, அதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அயலகத் தமிழர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யபப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாநில திமுக பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி நன்றி கூறினார். இதில் கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி, அவைத் தலைவர் மொ. பெரியசாமி, பொருளாளர் கே. தட்சணாமூர்த்தி, துணை அமைப்பாளர்கள் ஜி. இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் மைசூரு பிரான்சிஸ், மைசூருத் தமிழ்ச்சங்கச் செயலாளர் ரகுபதி, உட்லேண்ட் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments