பெங்களூரு, அக். 23: புற்றுநோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை
பெறுவது அவசியம் என்று சௌம்யாரெட்டி எம்.எல்.ஏ தெரிவித்தார்.
பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை மார்பு புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சி முகாமை தொடக்கி வைத்து அவர் பேசியது: புற்று நோயால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கு மரணம் நிச்சயம் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக மார்பு புற்றுநோயால்
பாதிக்கப்படும் பெண்கள், தாங்கள் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டத்தை
வெளியே கூற அச்சப்படுகின்றனர். இதனால் நோய் முற்றி பலர் இறக்க
நேரிடுகிறது. புற்றுநோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெறுவது
அவசியம். புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க தற்போது பல நவீன
தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனைப் பயன் படுத்திக் கொண்டு அனைவரும் புற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்வதற்கு தயங்குபவர்கள், தாங்களே சுயமாக புற்றுநோய் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளும் வசதி தற்போது உள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு புற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மார்பு புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சி முகாமை அப்பல்லோ மருத்துவக் குழுமத்தினர் ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. மார்பு புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க பெண்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என்றார். நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் கர்நாடக மண்டல
மேலாளர் டேவிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Коментарі