பெங்களூரு, அக். 20: இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாதெமியின் புதுமையான சர்வதேச திரைப்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 76 திரைப் படங்கள் பங்கேற்றன.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாதெமி சார்பில் புதுமையான சர்வதேச திரைப்பட விழாவின் 4-வது பதிப்பு 4 நாள்கள் நடைபெற்று, திங்கள்கிழமை நிறைவு பெற்றது. திரைப்பட விழாவில் 30 நாடுகளைச் சேர்ந்த 45 மொழிகளில் 76 திரைப் படங்கள் பங்கேற்றன. விழாவின் இறுதி நாளில் ஆஸ்திரியா, தாய்லாந்து, இலங்கை, பின்லாந்து, இந்தோனேசியா, தான்சானியா, ரஷ்யா, பிரான்ஸ், கஜகஸ்தான், மெக்சிகோ, மியான்மர், ருவாண்டா மற்றும் மாலி ஆகிய நாடுகளின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தாதா சாகேப் பால்கே எம்எஸ்கே அறக்கட்டளையுடன் இணைந்து, புதுமையான திரைப்பட அகாதெமி உலக சினிமாவுக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புக்காக திரைப்படங்களையும், கலைஞர்களையும் அங்கீகரித்து கௌரவித்தது. திரைப்பட விழாவில் பிரபல கன்னட நடிகர் ராகவேந்திரா ராஜ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, டோலுவுக்கு சிறந்த கன்னடப் படத்திற்கான விருது வழங்கப்பட்டது. இஸ்ரேலைச் சேர்ந்த ஆசியா சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை பெற்றது. மேலும், இந்தோனேசியாவின் ஹபிபி, ஐனுன் மற்றும் இலங்கையின் ஆயு ஆகிய படங்கள் சிறந்த ஆசியப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்ணன் சிறந்த இந்தியப் பட இயக்குனருக்கான விருதைப் பெற்றார். தாய்லாந்து நாட்டின் "கான் ஹார்டிஸ்ட்" சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட விருதை வென்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ரஷ்யாவைச் சேர்ந்த "டோடோவ்ஸ்கி இண்டர்காண்டினென்டல்" க்கு வழங்கப்பட்டது.
திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாதெமியின் நிறுவனரும், இயக்குநருமான சரவண பிரசாத் பேசியது: இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாதெமி தொடர்ச்சியாக நான்காவது முறையாக புதுமையான சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது இந்திய திரைப்படத் துறைக்கு சர்வதேச சந்தையை அறிமுகப்படுத்துவதற்கும், பிற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களைக் கண்டறியவும் ஒரு வாய்ப்பாக இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்ய நாங்கள் விரும்பினோம். இதன் மூலம் திரைப்படத் தயாரிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள தயாரிப்பாளர்களுக்கு புதுமையான திரைப்பட விழா உதவும் என்று நம்புகிறோம் என்றார்.
Commentaires