பெங்களூரு, அக். 20: பெங்களூருவைச் சேர்ந்த திறன் பரிமாற்றத்திற்கான ஆசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு (ஆர்டிஸ்ட்) ஃபிக்கி ஹெல்த்
கேர் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆர்டிஸ்ட் நிறுவனத்திற்கு13-வது ஃபிக்கி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிற்குபிந்தைய காலத்தில் எண்ம தளத்தின் மூலம் தாய் மற்றும் குழந்தைகள் சுகாதாரப் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் கரோனா தடுப்பு வீரர்களை தயார் செய்ததற்காக இந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பெங்களூருவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹேமா திவாகரால் நிறுவப்பட்டது திறன் பரிமாற்றத்திற்கான ஆசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும் (ஆர்டிஸ்ட்). கற்றல், ஆராய்ச்சி, திறன் பரிமாற்றத்திற்கான ஒரு முதன்மையான நிறுவனம் ஆகும். மகப்பேறியல், மகளிர் மருத்துவ பராமரிப்பு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதனை கரோனா நமக்கு கட்டாயமாக்கியது. ராஜீவ் காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்துடன், ஆர்டிஸ்ட் இணைந்து 2020-ஆம் ஆண்டு ஏப்.15-ஆம் தேதி எண்ம பயிற்சி தளத்தின் மூலம் இந்தியா முழுவதும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை டாக்டர் ஹேமா திவாகர் தொடங்கினார். கர்நாடகம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், அசாம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பீகார், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 3,600-க்கும் அதிகமான ஊழியர்கள், செவிலியர்கள்,முன்னணி சுகாதார வழங்குநர்கள் பயிற்சி பெற்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறனை பயிற்சியில் வளர்த்துக் கொண்டனர். இந்த முயற்சியால் பயிற்சி பெற்ற 450 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர மகப்பேறு இல்லங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை பயனடைந்துள்ளனர். திறன் பரிமாற்றத்திற்கான எண்ம தளத்தைப் பயன்படுத்துவதன் செயல்திறனை மேம்படுத்தி, தாய் மற்றும் குழந்தை ஆகியோரி நோயால் பாதிக்கப்படுவது, இறப்பு ஆகியவற்றைக் குறைந்த செலவில் தடுக்கப்பட்டது. ஆர்டிஸ்ட் நிறுவனத்திற்கு ஃபிக்கி விருது கிடைத்தால் பெருமைப்படுகிறோம். எண்ம திறன் பரிமாற்றத்தின் மூலம் பெண்களின் சுகாதாரத்தை எதிர்காலத்தில் மாற்றுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை பாதுகாக்க 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உறுதி பூண்டுள்ளோம் என்று டாக்டர் ஹேமா திவாகர் விருது பெரும் இணையதள விழாவில் தெரிவித்தார். விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் முன்னாள் செயலாளர் சி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
Comments