பெங்களூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி அரசு செயல்படுத்திவருகிறது: எஸ்.எம்.கிருஷ்ணா
- Dhina mani
- Oct 12, 2021
- 1 min read

பெங்களூரு, அக். 11: பெங்களூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி அரசு
செயல்படுத்தி வருகிறது என்று முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா
தெரிவித்தார்.
பெங்களூரு கோபாலபுரத்தில் ஆசிய அளவில் பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான குளோபல் வணிகவளாகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் வர்த்தகத்திற்கு மட்டுமின்றி, தகவல், உயிரி தொழில்நுட்பத்திலும் பெங்களூரு சிறந்து விளங்குகிறது. பெங்களூரில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டினர் ஆர்வமாக உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் பாதிப்பு இருந்ததால், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் குன்றியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பெங்களூரை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகளை அரசு செய்து வருகிறது. நான் முதல்வராக பதவி வகித்தப்போது, பெங்களூரில் வளர்ச்சிக்கு தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டது. அதனை பயன்படுத்திக் கொண்டதன் பயனாக பெங்களூரு தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. கரோனா தொற்றிற்கு பிறகு மிகப்பெரிய வணிக வளாகத்தை லூலூ குழுமத்தினர் தொடங்கி உள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், லூலூ குழுமத்தின் மூத்த மேலாண் இயக்குநர் எம்.ஏ யூசுப் அலி, மக்களவை உறுப்பினர் டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments