பெங்களூரு, டிச, 29: நடிகர் புனித்ராஜ்குமாரின் கண் தானத்திற்கு பிறகு கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நாராயணா கண் மருத்துவமனையின் தலைவர் புஜங்கஷெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை கண் தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், நடிகர் டாக்டர் ராஜ்குமார் கண் வங்கியின் மூலம் கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்வதற்கான தொலை பேசி எண் 8884018800-ஐ அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது: நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து, அவரது கண்கள் நாராயணா கண் மருத்துவமனையின் டாக்டர் ராஜ்குமார் கண் வங்கிக்கு தானம் செய்யப்பட்டது. தானம் செய்யப்பட்ட அவரது கண்கள், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 4 பேருக்கு கண் பார்வை கிடைக்க வழிகோலியது. நடிகர் புனித்ராஜ்குமாரின் கண் தானத்திற்கு பிறகு கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கண் தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு அது தொடர்பான வழிமுறைகள் தெரியாமல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நாராயணா கண் மருத்துவமனை சார்பில் 8884018800 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளோம். கண் தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு மிஸ்கால் செய்தால், கண் தானம் செய்வதற்கான படிவத்தை லிங்க் அனுப்பி வைக்கப்படும். அதனை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால், கண் தானம் செய்வதற்கான நடைமுறைகள் முழுமை அடையும்.
மேலும் நிகழ்ச்சியில் தங்களது கண்களை சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் படிவத்தை நிரப்பி, தானம் செய்துள்ளனர். 1994- இல் நடிகர் ராஜ்குமார் கண் வங்கியை திறந்து வைத்து தனது கண்களை தானம் செய்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி பர்வத்தம்மா ராஜ்குமாரும் கண்களை தானம் செய்தார். அவர்கள் மறைந்த பின்னர் அவர்களது கண்கள் தானம் செய்யப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பேர் கண் தானம் செய்ய முன் வந்துள்ளனர். இது பெரும் சாதனையாகும். டிச. 27-ஆம் தேதி வரை 234 பேரிடமிருந்து, 209 கண்கள் தானம் பெறப்பட்டுள்ளது என்றார்.
コメント