
பெங்களூரு, ஜூலை 22: நமது நாடு கண்ட அதிசய மனிதருள் மாணிக்கம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் என்று பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
கர்நாடக ஹிந்து நாடார் சங்கத்தின் சார்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122ஆவது பிறந்தநாள்விழா சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. காமராஜர் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 10,12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பெங்களூரு தமிழ்ச்சங்கம் நடத்தும் காமராஜர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சங்க இணையவழி தமிழ்க்கல்வி மாணவர்களின் சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது.
இந்தவிழாவில் சிறப்புவிருந்தினராக பங்கேற்று பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளர் ராமசுப்ரமணியன் பேசியது: நமது நாடு கண்ட அதிசய மனிதருள் மாணிக்கம் காமராஜர். தமிழகத்தின் முதல்வராக 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர், 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி காட்டினார். இன்றைய அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இளம்தலைமுறை படித்தறிய வேண்டிய மாமனிதர் காமராஜர். தனது ஆட்சிகாலத்தில் 15 அணைகளை கட்டியவர். ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தவர். அரசுப்பள்ளிகளில் மதிய உணவு வழங்கியவர்.
தன்னலம் கருதாமல் ஆட்சி நடத்தியவர். இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருந்தால், 20 ஆண்டுகள் முன்னோக்கி தமிழகம் முன்னேறி அடைந்திருக்கும். அப்படிப்பட்ட தலைவர் நமக்கு கிடைப்பது அரிது. காமராஜரை நமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவரின் வாழ்க்கையை இளம் தலைமுறை கடைபிடிக்க வேண்டும்," என்றார்.
விழாவில், துணைத்தலைவர் குருசாமி, சங்கச்செயலாளர் கிருஷ்ணவேணி, துணைச்செயலாளர்கள் சசிகாந்த், விஜயா ராம்குமார், சீனிவாசகம், பிரபு ராஜாமணி, பொருளாளர் ஜவகர், முன்னாள் தலைவர் ஆர்.கே.சந்திரசேகர், கர்நாடக தேவர் சங்கதுணைத்தலைவர் கனகராஜ், விஸ்வகர்மா சங்கத்தலைவர் சண்முகம், செயலாளர் தங்கம், திரௌபதி அம்மன் கோயில் தலைமை அறங்காவலர் வா.ஸ்ரீதரன், வா.கோபிநாத், நிர்வாகி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments