பெங்களூரு, மே 22: தொழிலாளர்கள் போராடினால்தான் உரிமையை பெற முடியும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
பெங்களூரு மாமுல்பேட்டை முக்கியச்சாலை, பி.பி.டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை தொமுச பேரவை சார்பில் 22-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,தமிழ்நாடு, கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ, கலாசிபாளையம் மார்க்கெட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர், வேடி (எ) பாஷா, மாநில திமுக அவைத்தலைவர் எம். பெரியசாமி, பொருளாளர் கே. தட்சிணாமூர்த்தி, பொதுக்குழுத் உறுப்பினர் எம்.ராமன், மாநில திமுக மகளிரணி தலைவர் அம்மாயி அம்மாள், துணைச் செயலர் காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கு கொண்டு ஆர்.எஸ்.பாரதி பேசியது: தமிழகத்தில் திமுகவை அண்ணா தொடங்கியபோது அவருக்கு ஏழைகள், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர், அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தொழிலாளகளுக்கு மே தினத்தையொட்டி ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஆடு, மாடுகளை போல நடத்தி, 20 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கியும், ஊதியம் கொடுக்காததால் சிகாகோ போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியாவில் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் தொழிலாளர்களுக்கான உரிமை இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. குறிப்பதாக பட்டியலின மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடும் இருந்தும், அவர்கள் அரசு பணிகளில் சேராமல், அதனை வேற்று சமூகத்தினர் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊதியதில் ஒரு பங்கை தங்களின் குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்கி, கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்ந்தால் தான் சாதிய அமைப்பை போக்க முடியும். அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை, சலுகைகளை ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள் பெற வேண்டும். மறுக்கும்பட்சத்தில் போராடினால்தான் உரிமைகளை பெற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் திமுகவினர் உள்ளிட்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம், பை, பெண்களுக்கு சேலைகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் அன்னதானம் வழங்கப்பட்டன. இறுதியில் பெங்களூரு கூலி தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், திமுக இளைஞரணி நிர்வாகியுமான டி.சிவமலை நன்றியுரை ஆற்றினார்.
Comments