பெங்களூரு, அக். 29: தாமஸ் குக்கின் விடுமுறை சுற்றுலாவில் கர்நாடகத்தின் பங்களிப்பு அதிகம் உள்ளது என்று லைசூர் டிராவல்ஸின் துணைத் தலைவர் சந்தோஷ் கண்ணா தெரிவித்தார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 18 மாதங்களாக கரோனா தொற்றின் பாதிப்பால் சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கிப் போயின. தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் உள்நாட்டு சுற்றுலா மட்டுமின்றி, வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 80 முக்கிய நகரங்கள், 25 நாடுகளில் சுற்றுலா சேவையில் சிறந்து விளங்கும் தாமஸ் குக்கின் வர்த்தகம் மாதந்தோறும் 70 சதம் உயர்ந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தாமஸ் குக்கின் வர்த்தகம் 219 சதமாக உள்ளது. தாமஸ் குக்கின் விடுமுறை சுற்றுலாவில் கர்நாடகத்தின் பங்களிப்பு அதிகம் உள்ளது. உள்நாட்டு சுற்றுலாவில் பெங்களூரிலிருந்து, லடாக்-காஷ்மீர், ஹிமாச்சல், அந்தமான், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் ஆஸ்திரிலியா, சுவிசர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். துபாயில் எக்ஸ்போ-2020 நடைபெறுவதால், அங்கு குடும்ப உறுப்பினர்களுடன் செல்வதற்கும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை சுற்றுலாவில் ஒருவர் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் மேலும் ஒருவர் இலவசமாக செல்லும் சலுகையை தாமஸ்குக் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க முன்பு 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். தற்போது கூட்டம் குறைந்து 5 நிமிடங்களில் சென்று ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க முடிகிறது என்றார்.
Comentarios