டீசல் விலை குறைக்க வலியுறுத்தி நவ. 5-ல் விதானசௌதா முற்றுகை
- Dhina mani
- Oct 25, 2021
- 1 min read
பெங்களூரு, அக். 24: டீசல் விலை குறைக்க வலியுறுத்தி நவ. 5-இல் விதானசௌதா முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கர்நாடக லாரி உரிமையாளர், முகவர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜி.ஆர்.ஷண்முகப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலையை குறை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இருப்பினும் டீசல் விலை குறையாமல் உள்ளது. டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கர்நாடகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி விதானசௌதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அன்று விதானசௌதாவை மட்டுமின்றி மாநில அளவில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.
கர்நாடக சரக்கு வாகன உரிமையாளர்களின் சங்கச் செயலாளர் சோமசுந்தரம் கூறியது: கரோனாவால் லாரி உரிமையாளர்கள், முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தொடர்ந்து டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் 30 சதம் லாரிகள் மட்டுமே ஓடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்கு வாகனங்களை நம்பியுள்ள ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு வாகனங்களின் உரிமையாளர்களிடம் மாதத் தவணைக் கட்ட வலியுறுத்தி கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி செய்து வருகின்றன. அவர்களிடம் அரசு பேசி, நெருக்கடி தராமல் இருக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

ReplyForward
Commentaires