ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் ரோர் அறிமுகம்
- Dhina mani
- Mar 15, 2022
- 2 min read

பெங்களூரு, மார்ச் 15: ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் ரோர் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் ரோர் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு அக்குழுமத்தின் இணை நிறுவனரும்,தலைமை நிர்வாக அதிகாரியுமான தினகர் அகர்வால் பேசியது: இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள் ரோரை அறிமுகம் செய்துள்ளோம். முதல் கட்டமாக தில்லி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 9 முக்கிய நகரங்களில் இந்த மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அரசுகளின் இந்த முடிவை தொடர்ந்து ஆதரிப்போம். அதற்கு தகுந்தபடி மின்சார வாகனங்களை திறனுடனும், நம்பகமானதாகவும் மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். எனவே செயல்திறன், நம்பகத்தன்மை, நேர்த்தியான வடிவமைப்பு, நடை, தரம், நம்பகத்தன்மை மற்றும் சுறுசுறுப்பு போன்ற முக்கிய காரணிகளை மனதில் கொண்டு ரோர் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோர் உள்நாட்டிற்குள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்கான முன் பதிவுகள் மார்ச் 18-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. முன்பணமாக ரூ. 999 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். 3 வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் ரூ. 99,999 முதல் ரூ. 1.24 லட்சம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. 3 வினாடிகளில் 40 கி.மீ வேகமெடுக்கும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், 2 மணி நேரம் சார்ஜ் செய்யப்பட்டு, 100 கி.மீ வேகத்தில், 200 கி.மீ வரை இயக்கமுடியும்.

ரோர் ஒரு நேர்த்தியான மற்றும் எதிர்கால தோற்றம் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும், இது மோட்டார், பேட்டரி, கன்ட்ரோலர், டிரைவ்டிரெய்ன் மற்றும் வடிவமைப்பு போன்ற அதன் முக்கியமான கூறுகளுக்கு காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்கணிப்பு பராமரிப்பு, சவாரி விவரங்கள், பேட்டரி நிலை, ஜியோ-ஃபென்சிங், ஜியோ-டேக்கிங், பேட்டரி திருடு போகாமல் பாதுகாப்பது, சார்ஜிங் ஸ்டேஷன் லோகேட்டர், ஆன்-டிமாண்ட் சேவை மற்றும் சாலையோர உதவி உள்ளிட்டவை மோட்டார் சைக்கிளின் முக்கிய அம்சங்களாகும். அதன் ‘கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும் ‘டிரைவர் அலர்ட் சிஸ்டம்’ ஆகியவை வாகனம் இயக்கத்தில் இருக்கும் போது நிலையானதாகும். வாகன பராமரிப்பு தேவைப்படும்போது, காட்சி மற்றும் செவிவழிக் குறிப்புகளை அதன் ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது. நுகர்வோரின் ஈடுபாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், முதல்-வகுப்பு கேமிஃபிகேஷன் அம்சமும் ரோர் மோட்டார் சைக்கிளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி தொழில்சாலையில் விரைவில் அதன் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தியைத் தொடங்கும். இந்த தொழில்சாலை ஆண்டுக்கு 3 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உள்ளது என்றார்.
ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மதுமிதா அகர்வால் பேசியது: விற்பனைக்கு பிந்தைய ஆதரவு, சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளில் சமரசம் செய்யாமல் புதிய சந்தைகளுக்கு விரிவடைவதில் நிலையான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுவோம். தில்லி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்குள் மோட்டார் சைக்கிள் விற்பனையை விரிவுபடுத்துவதற்கு ஆர்வமாக உள்ளோம்.உதிரி பாகங்களை சரியான நேரத்தில் கிடைக்கச் செய்யவும், வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே சென்று சர்வீஸ் செய்யும் முடிவு செய்துள்ளோம். மேலும் விவரங்களை www.obenev.com என்ற இணையதளத்தில் பெறலாம் என்றார்.

Comments