பெங்களூரு, மே 6: உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் அரசு அமைத்துள்ள சிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் மாநகர காவல் ஆணையரும், ஆம் ஆத்மி கட்சியில் அண்மையில் இணைந்துள்ள பாஸ்கர்ராவ் தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரிகையாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாஜக அமைச்சரின் சகோதரருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கண்துடைப்பிற்காக நடைபெறும் இந்த விசாரணையால், நீதி கிடைக்காது. எனவே இதனை உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும். மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணின் சகோதரர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கேக்கு சி.ஐ.டி 3 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளபோது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார். முன்னாள் முதல்வரின் மகன் பிஎஸ்ஐ பணிக்கான தேர்வில் பெரிய அளவில் முறைகேடு செய்ததாக சிஐடியில் வழக்கறிஞர் குழு புகார் அளித்துள்ளது. அவர் யார் என்பதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள 20 தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக சிஐடி அதிகாரிகள் கூறியதாக கடந்த சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திமிங்கிலங்கள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களுக்கு அரசியல் பின்புலமுள்ளதால், அவர்களை காப்பாற்ற அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார்.
மேலும் அதானி நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை மாநில அரசு வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட சாதாரண மக்களின் அதிககட்டணம் வசூலிக்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியும். அங்கு மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. கர்நாடகத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் மின் உற்பத்தி, விநியோகத்தில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளால் போக்குவரத்து கழங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமின்றி பாஜக ஆட்சியிலும் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றார். பேட்டியின் போது அக்கட்சியின் நிர்வாகிகள் சன்னப்ப கௌவடா நெல்லூர், விஜய் சாஸ்திரிமத், சுரேஷ் ரத்தோட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Comments