பெங்களூரு, அக். 28: இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகங்களில் பிரச்னை உள்ளது என்று நியூரா மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் தௌசிப் அகமது தங்கல்வாடி தெரிவித்தார்.
இது குறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உலக அளவில் இந்தியப் பெண்களுக்கு மார்பகப் பிரச்னைகள் ஏற்படுவது சராசரியை விட இரு மடங்காக உள்ளது. பொதுவாக இது போன்ற பிரச்னைகள் பாதிப்பில்லாதவை என்றாலும், புற்றுநோய்களாக உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. உளவியல்,சமூகத் தடைகள் காரணமாக பல பெண்கள் மார்பகப் பரிசோதனையைத் தவிர்க்க முனைகின்றனர். இளம் பெண்களைவிட வயதானவர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை தேவை என்று பலர் கருதுகின்றனர். பொதுவாக மார்பக பரிசோதனை செய்ய 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால், இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இறப்பு விகிதம் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் கடுமையாக அதிகரிக்கிறது. நகரங்களில் வசிக்கும் பெண்களை விட, கிராமங்களில் வசிக்கு பெண்களுக்கு மார்பு புற்றுநோய்கான பாதிப்பு அதிக உள்ளது. இதற்கு நகரங்களில் வசிக்கும் பெண்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்ச்சி அதிகம் உள்ளதே காரணம். மார்பக புற்றுநோயை மேமோகிராம் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். ஆனால் பல பெண்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். பெண்கள் விழிப்புணர்ச்சியுடன் இருந்தால் மட்டுமே ஆரம்பக்கட்டத்திலேயே மார்பு புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணமாக்க முடியும் என்றார்.
Comments