பெங்களூரு, மார்ச் 20: ஆர்.வி. பல்கலைக்கழகத்தில் காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் சனிக்கிழமை ஆர்.வி. பல்கலைக்கழகம் சார்பில் காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மையம் (விஷுவல் அண்ட் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ்) தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஆர்.வி. பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தேசியக் கல்விக்குழு அறக்கட்டளையின் தலைவருமான பாண்டுரங்க செட்டி, ரங்க சங்கரா நிறுவனர் அருந்ததி நாக், முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.ஜெயஸ்ரீ, புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஜெயந்த் கைகினி, ஆர்.வி. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி, காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தின் செயல் இயக்குநர் பேராசிரியர் தீபா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாண்டுரங்க செட்டி பேசியது; உலகின் எதிர்கால பணியிடங்கள் படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றைப் பார்க்கின்றன. இவை கலைப் பயிற்சியின் திறன்கள். அறிவின் உறுதியான அடித்தளம் மற்றும் புதுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்கும் திறன் ஒவ்வொரு லிபரல் ஆர்ட்ஸ் பள்ளி மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அபிலாஷையாகும். ஆர்.வி. பல்கலைக்கழகத்தில், நாங்கள் அதை ஊக்குவிக்க விரும்புகிறோம். நாங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மட்டும் அர்ப்பணிப்புடன் இருக்கவில்லை, ஆனால் ஆக்கப்பூர்வமாக பிரச்சனைகளை தீர்க்கும் திறனுடன், சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அதை மேலும் வாழக்கூடிய இடமாக மாற்றுவதற்கும் பாடுபடுவோம் என்றார்.
ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி பேசியது: காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தின் சார்பில் நவம்பரில் பெங்களூரில் ஆண்டு இசை விழாவை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாடகம், நடன விழாவைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். சிறந்த கலாசார நிறுவனங்கள், கலை மற்றும் நாடகப் பள்ளிகள், இசை சபாக்கள், முக்கிய தேசிய மற்றும் சர்வதேச விழாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த மையத்தை துடிப்பான அமைப்பாக உருவாக்கி, ஆண்டு முழுவதும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் ஈடுபடுவோம். இந்த மையம் முன்னணி கலைஞர்களின் பட்டறைகள், மாநாடுகள், விரிவுரை விளக்கங்களை நடத்தும். மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் சிறந்த கற்றல் வாய்ப்புகளை வழங்கும் சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் வார இறுதி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இந்த மையம் வழங்கும் என்றார்.
அருந்ததி நாக் பேசியது: ஆர்.வி பல்கலைக்கழகம் காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிக்களுக்கான மையத்தைத் தொடங்கியுள்ளது ஒரு முக்கியமான நாளாகும். நமது வாழ்வில் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக மாணவர்கள் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள மற்றவர்களும் ஆர்.வி. பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.
பி.ஜெயஸ்ரீ பேசியது:ஆர்.வி. பல்கலைக்கழகம் உள்ளிட்ட அதன் கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் மலிவு விலையில் உயர்தரக் கல்வியை வழங்குவதன் மூலம் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. இந்த புதிய காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான மையத்தைத் திறப்பதன் மூலம், மாணவர்கள் தங்கலின் ஆர்வத்தைத் தொடர புதிய கதவுகள் திறந்து வைத்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெயந்த் கைகினி பேசியது: இளைஞர்கள் தங்கள் ஆர்வத்தையும் கனவுகளையும் தொடர வாய்ப்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காட்சி மற்றும் கலைநிகழ்ச்சி மையம் போன்ற நிறுவனங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தீபா கணேஷ் பேசியது: கலை ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்டதாக சரித்திரம் இல்லை, சமூக-அரசியல் நிகழ்வுகளால் அது ஆழமாகப் பாதிக்கப்பட்டது. எனவே, கலையைப் படிப்பது கடந்த காலத்திற்கான தடயங்களை வைத்திருப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தைக் கையாள்வதற்கான திறவுகோல்களையும் கொண்டுள்ளது. காட்சி மற்றும் கலை நிகழ்ச்சி மையம் வழக்கமான துறைகளைப் போல் அல்லாமல், உரையாடலுக்கான இடமாக இருக்க விரும்புகிறது. சமூகப் பொருத்தமான, பங்கேற்பு நடைமுறைகளில் கவனம் செலுத்த விரும்புகிறது. கலை மற்றும் சமூகத்தின் தன்மையை ஆராயும் திட்டங்களை ஊக்குவிக்கிறது என்றார்.
Comentarios