பெங்களூரு, அக். 26: 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் கேத் லேப்களை திறக்க முடிவு செய்துள்ளோம் என்று ஐஐடிபிஎல் மேலாண் இயக்குநர் கௌரவ் அகர்வால் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இன்னோவேஷன் இமேஜிங் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் (ஐஐடிபிஎல்) கேத்லேப் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: இதய நோயால் ஆண்டுதோறும் பலர் இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்க ஐஐடிபிஎல் சார்பில் கேத்லேப்களை திறந்து வருகிறோம். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் கேத் லேப்களை திறக்க முடிவு செய்துள்ளோம். சர்வதேச தரத்திலான கேத் லேப்புகளில் குறைந்த விலையில் இதய நோய்க்கான சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் கேத் லேப்களை திறக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது: கேத்லேப் போன்ற மருத்துவ சாதன கண்டுபிடிப்புகள், நம் நாடு இறக்குமதியைச் சார்ந்திருப்பதை நிச்சயமாகக் குறைக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக உயர்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே கேத்லேப்களுக்கான தேவை இந்தியாவிற்கு உள்ளது. ஐஐடிபிஎல் தரத்தில் சமரசம் செய்யாமல் சர்வதேச தரத்துடன் பொருந்தக்கூடிய ஆராய்ச்சியைத் தொடர வேண்டும், மக்களுக்கு மலிவு விலையில் இதய சிகிச்சை வசதியை வழங்க வேண்டும். பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சுதாகர், ஜெயதேவா மருத்துவமனை இயக்குநர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comentarios